திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் தாமிரபரணி ஆறு, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கோபாலசமுத்திரம் வழியாக நெல்லை மாநகரில் வந்தடைந்து, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வழியாக புன்னக்காயலில் சென்று கடலில் கலக்கிறது.
தாமிரபரணியின் நீராதாரத்தை நம்பி, திருநெல்வேலி, தூத்துக்கு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. இவை தவிர அணைகளில் சேமிக்கப்படும் குடிநீர், விவசாயத்தேவைகளுக்காக திறந்து விடப்படும். இதனால் ஆண்டு முழுவதும் தாமிரபரணியில் நீர் ஓடிக்கொண்டே இருக்கும். மழைக்காலங்களில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைக்காரணமாக அணைகளுக்கு வரும் அதிக நீர் வரத்தின் காரணமாக, உபரி நீர் திறந்து விடப்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவர்.
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நெல்லை மாவட்டம் முழுதும் கடந்த ஆறு தினங்களாக, தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தொடர்மழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் இருந்து மழைநீர் தாமிரபரணி ஆற்றில் கலந்து, ஆற்றில் வழக்கத்தை விட அதிகமான அளவு நீர் ஓடுகிறது.
ஆற்றில் நீர் வரத்து அதிகரித்திருப்பதால், ஆற்றின் கரையோரம் உள்ள குறுக்குத்துறை முருகன் கோயிலில் தண்ணீர் புகுந்து ஆற்றின் இரு கரைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொக்கிரகுளம் ஆற்றுப்பகுதியில் உள்ள மண்டபங்களை பாதி வரை முழ்கிய படி நீர் ஓடுகிறது. இதனால், ஆற்றில் குளிக்கும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படும் படி நெல்லை மாநகர காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மழைநீரில் மிதந்துவந்த ஆதார் அட்டைகள் - வைரலாகும் காணொலி