நெல்லை: தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு, நேற்று நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்ட காவல்துறையிலுள்ள உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு, கஞ்சா 2.0, ரவுடிகள் கட்டுப்படுத்தும் நடவடிக்கை, கந்து வட்டி தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவினாஷ் குமார், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், நெல்லை சரக டிஐஜி பரவேஷ்குமார் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட வாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கந்துவட்டி, கஞ்சா போன்றவற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் அவர், நெல்லை காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் சிறப்பாகப் பணி செய்த காவல் துறையினருக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். முன்னதாக, டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'கந்து வட்டி தொடர்பாக தமிழ்நாடு முழுதும் 238 புகார்கள் பெறப்பட்டு 171 வழக்குகள்பதிவு செய்து 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்து வட்டி புகார்களில் கைது செய்யப்படுவோரின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென் மண்டல அளவில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்து முடக்கப்படுவதுபோல், இதனைப்பின்பற்றி தமிழ்நாடு முழுதும் இதே நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடும் சம்பவம் முழுக்க தடுக்கப்பட்டு, அதுபோன்ற நிலை தற்போது இல்லை’ என்று கூறினார்.
அத்துடன் 'மேலும் ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ரயில்வே போலீஸ் மூலம் கஞ்சாவை மட்டும் கண்டுபிடிக்கும் வகையில் மோப்ப நாய்களுக்கு சென்னை, கோவை, சேலம் ஆகிய இடங்களில் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொதுமக்களுக்கு இடையூறு செய்த கஞ்சா ஆசாமிகள்! வெளுத்து வாங்கிய ஐதராபாத் போலீஸ்