வெளிநாடுகளைச் சேர்ந்த காரப்பரேட் நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலம் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்கள் உதவியுடன், இந்திய வர்த்தகத்தில் கால் பதிக்க முயற்சி செய்வதாகவும், அதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறி, தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தப்பட்டது.
இது குறித்து அக்கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேஷ் பேசியபோது, ” நம் நாட்டின் தயாரிப்பு நிறுவனங்கள் இரட்டை விலையை கடைபிடிக்கின்றன. பாரம்பரியமாக வியாபாரம் செய்து வரும் சில்லறை வணிகர்களுக்கு ஒரு விலையும், வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை விலையும் கொடுக்கின்றன. இதன் மூலம் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆன்லைன் வழியாக இந்திய வர்த்தகத்தில் கால் பதிக்க முயன்று வருகின்றன. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
சில்லறை வணிகத்தை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றன. 90% வியாபாரம் சில்லறை வணிகம் மூலமே நடைபெறுகிறது. 10% வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் விற்பனையாகிறது. எனவே வெளிநாட்டு நிறுவனங்களின் இச்சதியை முறியடிக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக்கட்டமாக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் ” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விமான நிலைய சரக்குப்பிரிவு ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!