திருநெல்வேலி: நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பரப்புரை மேற்கொண்டார்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஸ்டாலின் பேசிய பரப்புரை, காணொளி மூலம் ஒளிபரப்பப்பட்டது. இதில் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதில் அவர் பேசுகையில், "10 ஆண்டுகளில் அதிமுக செய்யமுடியாத சாதனையை ஆட்சிக்கு வந்த 9 மாதத்தில் திமுக செய்துள்ளது.
பச்சை பொய் பழனிசாமி
ஆனால், திமுக எதுவும் செய்யவில்லை என்று எதிர்கட்சி தலைவர் பழனிசாமி பேசி வருகிறார். அவர் ஒரு பச்சை பொய் பழனிசாமி. திமுக ஆட்சியில் என்ன செய்தோம் என மக்களை களத்தில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி கேட்கட்டும். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என பொத்தாம் பொதுவாக சொல்லாமல் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறோம். அதிமுக ஆட்சியில் பரமக்குடி துப்பாக்கி சூடு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சாத்தான்குளம் படுகொலை என பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன.
காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய் துறை கட்டுப்பாட்டில் எடுத்து இயக்கக்கூடிய நிலை அதிமுக ஆட்சியில் நடந்தது. அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை ஆகியவை செய்தித்தாள்களில் தலைப்புகளாக இருந்தது.
ஜெயலலிதா மரணம்: உண்மை வெளிவரும்
தமிழ்நாடு அரசின் தலைமை பீடமான தலைமைச் செயலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். தலைமைச் செயலகத்தில் சோதனை நடந்தது வரலாற்றில் அழிக்கமுடியாத கரையாக மாறியது.
ஹாலிவுட் படத்திற்கு இணையாக இருக்கிறது கொடநாட்டில் நடந்த சம்பவம். ஜெயலலிதா மறைந்த நள்ளிரவில் கொடநாட்டின் ஒன்பதாவது வாயிலில் 11 பேர் கொண்ட கும்பல் கொள்ளை சம்பவம் நிகழ்த்தியது. அப்போது பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், முடக்கி வைத்த நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் செயல்படப்போகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகி, விரைவில் உண்மை வெளிவரும்.
போலி நகைக்கடன்
அதிமுக அரசு, நிதி நிலையை சீரழித்த நிலையில், திமுக அரசு அமைந்த உடன் பல திட்டங்களை செய்துள்ளது. கடந்த 10 ஆண்டு காலத்தில் 50 லட்சம் கோடி கடனை உயர்த்தி தமிழ்நாட்டை கடனாளி மாநிலமாக அதிமுக மாற்றியது. தமிழ்நாட்டின் நிதி நிலையை அதிமுக தலைகுணிய வைத்ததை, திமுக தலை நிமிரச்செய்து வருகிறது. போலி நகைகளை வைத்து அதிமுக ஆட்சியில் கடன் வாங்கியுள்ளனர்.
நகைகளே வைக்காமல் கூட பல இடங்களில் கடன் வாங்கியுள்ளனர்.
அதிமுகவினர் செய்த மோசடி நகைக்கடனை ஏன் ரத்து செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். உண்மையாக நகைகளை வைத்து கடன் வாங்கியவர்களின் நகைக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிதி நிலை மோசமாக இருந்தாலும் நிவாரண நிதி ரூ. 4000 வழங்கப்பட்டது. அதிமுகவின் கொத்தடிமை கூட்டத்திற்கு திமுகவை விமர்சிக்க எந்தத் தகுதியும் கிடையாது. அனைத்து திட்டங்களிலும் அதிமுக அமைச்சர்கள் ஊழல் மோசடி செய்துள்ளனர். இந்த மோசடிக்காக தான் கடந்த தேர்தலில் அதிமுகவிற்கு மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர்.
எஸ்.பி. வேலுமணியின் ஊழல்
தமிழ்நாட்டின் கருப்பு பக்கத்தில் பதிவான முகங்கள் அதிமுக ஆட்சியாளர்களுடையது என்பதை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். பல ஊழல்கள் செய்துவிட்டு நல்லவர்கள் போல் இந்த தேர்தலில் மக்களை சந்திக்க அதிமுகவினர் வந்துவிட்டனர். மக்கள் அதிமுக அரசில் நடைபெற்ற ஊழல்கள் எதையும் மறக்கவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு எந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி சுண்ணாம்பு வாங்கியதிலிருந்து பினாயல் வாங்கியது வரை ஊழல் செய்துள்ளார்.
170 ரூபாய்க்கு கிடைக்கும் 25 கிலோ சுண்ணாம்பினை, 800 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். 1,500 ரூபாய் கொண்ட மோட்டாரை 25, 000 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். 1,800 ரூபாய் காப்பர் வயரை 10,000 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் பொருள்கள் வாங்கியதில் மட்டும் ஒரு ஊராட்சிக்கு 1 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். இந்த ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி இதுவரை பதில் சொல்லவில்லை” என்று பேசினார்.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது