தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்மழை நீடித்து வந்தது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது.
அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடுமையான வெள்ள சேதம் ஏற்பட்டது. மழை வெள்ள சேதத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக வந்து பார்வையிட்டார். கடந்த வாரம் குமரி மாவட்டம் வந்த அவர் மழையால் துண்டிக்கப்பட்ட சாலைகள், தண்ணீரில் மூழ்கிய விளை நிலங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மத்திய குழு ஆய்வு
அதேபோல் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குமரி மாவட்ட கண்காணிப்பாளர் ஜோதி நிர்மலா சாமி உள்ளிட்டோரும் மழை வெள்ள சேதத்தை பார்வையிட்டனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் வெள்ள சேதத்தை பார்வையிட ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் இன்று (நவ.22) தமிழ்நாடு வந்தனர்.
இந்தக் குழுவினர் இன்று 11 மாவட்டங்களில் ஆய்வு தொடங்கினர். இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஆர்.பி.கவுல், மத்திய நீர் வள ஆராய்ச்சி இயக்க தங்கமணி, மத்திய எரிசக்தித் துறை உதவி இயக்குநர் பவ்யா பாண்டே, மத்திய வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் கொண்ட குழு பல இடங்களை ஆய்வு செய்ய வந்தனர்.
மனுக்கள் வழங்கிய எம்எல்ஏ, எம்பி
இதற்காக இன்று தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். அங்கு தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரிய துறை, வேளான் ஆகிய துறைகளால், மழை வெள்ளத்தில் சேதத்தை விளக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டனர்.
பின்னர் கன்னியாகுமரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தளவாய் சுந்தரம், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் அந்த குழுவினரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
கன்னியாகுமரியில் இருந்து பல மாவட்டங்களுக்கு ஆய்வுசெய்ய செல்கின்றனர். ஆய்வுகளை முடித்த பின்னர் கன்னியாகுமரி திரும்பும் குழுவினர் மாலையில் அங்கிருந்து தூத்துக்குடி புறப்பட்டுச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: TN Heavy rain: தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை எச்சரிக்கை