திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி காவல் துணை கண்காணிப்பு நிலையத்தில் ராமமூர்த்தி (50) என்பவர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இவரிடம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த வழக்கறிஞர் செல்வ வேலாயுதம் என்பவர், முக்கூடல் அருகேயுள்ள கபாலிபாறையை சேர்ந்த சங்கரகோணார் மனைவி பட்டம்மாள் என்பவரது பத்திரம் தொலைந்துவிட்டதாகவும், கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் போலி புகார் கொடுத்துள்ளார்.
இந்த போலி புகாருக்கு காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தியும் பணத்தை பெற்றுக் கொண்டு, முக்கூடல் காவல் ஆய்வாளர் கோகிலாவின் கையொப்பம் மற்றும் முத்திரையை போலியாக பதிந்து சான்று கொடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் உதவி ஆய்வாளர் கொடுத்த போலி சான்றிதழை அடிப்படையாக கொண்டு பட்டம்மாள் தனது இடத்தை அவரது மகன் முருகேசனுக்கு முக்கூடல் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார்.
இதனிடையே சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி போலியாக இன்ஸ்பெக்டர் கோகிலாவின் கையெழுத்தை போட்டது நெல்லை மாவட்ட எஸ்.பி சரவணனுக்கு தெரியவந்துள்ளது. பின், அவரது உத்தரவின்பேரில் முக்கூடல் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து ராமமூர்த்தி மீது முக்கூடல் போலீசார் மோசடி, ஆவணங்களை தவறாக பயன்படுத்துதல் உள்பட 5 -க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராமமூர்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட இருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனை தொடர்பு கொண்டு கேட்டபோது, தகவல் கேள்விப்பட்டவுடன் உடனடியாக விசாரணை நடத்தி தற்போது சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக துரை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று குற்றத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதையும் படிங்க: பத்து ஆண்டுகளாக தண்டைக்கும் ஆளாகாத காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா...