திருநெல்வேலி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஆகஸ்ட் 28) நெல்லையில் நடைபெற்ற தனது உதவியாளரான சாரதி பி.சி.துரை என்பவரின் இல்ல மணவிழாவில் நேரில் கலந்து கொண்டார்.
முன்னதாக வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘திராவிட மாடல் ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சமீபத்தில் போட்டுள்ளார். சொல்லாததையும் செய்து வருகிறேன் என்று அவர் சொல்வதைப் போல சாதித்து வருகிறார். எனவே, தமிழ்நாட்டில் கருணாநிதிக்குப் பிறகு பொற்கால ஆட்சி நடத்த முடியுமா? என்ற கேள்விக்குப் பதிலாக திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தியாகராயர் ஆகியோரால் கட்டி எழுப்பப்பட்ட திராவிடக் கோட்டையை ஆதிக்க சக்திகள் சங்பரிவார் சக்திகள் சிதைக்கப் பார்க்கிறார்கள். இந்தி, சமஸ்கிருதத்தைத் திணித்து தமிழ்நாட்டைக் கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.
அண்மையில் இந்தூரில் 75 ஆண்டு கால சுதந்திர தினத்தை ஒட்டி, நடைபெற்ற விழாவில் பாஜகவுக்கு பின்னால் இருந்து செயல்படும் சங்பரிவார் அமைப்புகள் ஊர்வலம் நடத்தினார்கள். அந்த ஊர்வலத்தில் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலைகார கொடியவன் கோட்சேவின் உருவத்தை வைத்து வாழ்க வாழ்க என முழக்கம் எழுப்பினர். இதைவிடக் கொடுமை எதுவும் இருக்காது.
மகாத்மா காந்தி உலகத்துக்கே வழிகாட்டிய தலைவர், அவரை சுட்டுக்கொன்றவருக்கு விழா எடுக்கும் கூட்டத்தினர் தமிழ்நாடு உள்பட அனைத்தையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்றி, இந்தி சமஸ்கிருதத்தை திணித்து, மாநில உரிமையையும் சிதைக்க முயற்சிக்கின்றனர். எனவே தான் இந்தியாவை யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என்று அமைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன்.
நம் முன்னோர்கள் நூறாண்டு காலம் ரத்தம் சிந்தி கண்ணீர் சிந்தி உருவாக்கிக் கொடுத்த திராவிட இயக்கக் கோட்டையை பாதுகாப்பதன் மூலம் திராவிட மாடல் ஆட்சி அதற்கு அரணாக இருக்கும். அதன் மூலம் இந்துத்துவா சக்தியை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அந்த உணர்வோடு தான் தமிழ்நாட்டில் அவர்கள் கால் எடுத்து வைக்க முடியவில்லை. அவர்கள் முயற்சி செய்கிறார்கள், ஆனால் இது ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட கோட்டை என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்.
பிரதமர் மிக சாதுரியமானவர். மகா கெட்டிக்காரர். அவர் இங்கே வந்து திருவள்ளுவரை பாரதியாரை பேசுகிறார். ஆனால், வடக்கே சென்றால் இந்தியில் தான் பேசுகிறார். அவர் இந்தியையும் இந்துத்துவா சக்தியையும் நிலை நாட்டுவதற்கு பிரதமர் செயல்பட்டு வருகிறார்.
தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் குறித்து பேசும்போது, துப்பாக்கிச்சூடு நடந்த அன்று நான் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்குச்சென்றேன். அவர்கள் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எனக்கதறினார்கள். தற்போது ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது ஒரு படுகொலை என்பதற்கு இந்த அறிக்கையே சாட்சியமாகும்’ என்று வைகோ தெரிவித்தார்.
இதையும் படிங்க:இன்னும் பலர் என் பக்கம் வர உள்ளார்கள்... அவர்கள் யார் என்பது பரம ரகசியம்... ஓ.பன்னீர்செல்வம்...