திருநெல்வேலி: தமிழ்நாடு முழுவதும் ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (அக். 12) நடைபெற்றது.
திமுக வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றனர். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார்.
பெருவெற்றி அடைந்த பெருமாத்தாள்
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களையும் மூதாட்டி டெபாசிட் இழக்கத் செய்ததோடு இரண்டாம் இடம் பிடித்த வேட்பாளரைவிட ஆயிரம் வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றிபெற்றார்.
பெருமாத்தாள், தனது வெற்றிச் சான்றிதழை நேரில் வந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக்கொண்டதுடன் தனக்கு வாக்களித்த கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
மேலும், வெற்றிச் சான்றிதழைப் பெற்ற பிறகு வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே வந்தபோது அங்கே திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினர் மகிழ்ச்சி ஆரவாரத்தில் மூதாட்டியைத் தோளில் சுமந்து ஊஞ்சலாட்டினர். பின்னர் அனைவரும் சேர்ந்து மூதாட்டி பெருமாத்தாளை பாதுகாப்பாக காரில் அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: 'பாஜக நிர்வாகிக்கு ஒரே ஒரு ஓட்டு' - நெட்டிசன்கள் கிண்டல்!