சேலம் நரசோதிபட்டி பகுதியைச் சேர்ந்த ரமணன் என்பவர் அருகிலுள்ள அவ்வை நகர் பகுதியில் தீத்தடுப்பு உருளையில் தீத்தடுப்பு வாயு நிரப்பும் தொழிற்சாலை நடத்திவருகிறார். இவரது தொழிற்சாலையில் திருப்பத்தூர், தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (22) என்பவர் கடந்த ஓராண்டு காலமாக பணியாற்றிவந்தார்.
இந்நிலையில் நேற்று (செப் 4), பாஸ்கர், தீத்தடுப்பு உருளையில் மோனோ அம்மோனியம் பாஸ்பேட், நைட்ரஜன் வாயுவை நிரப்பிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு உருளை வெடித்துத் சிதறியது.
இதில் பாஸ்கர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல் துறையினர் விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாகச் சென்று ஆய்வுமேற்கொண்டனர்.
மேலும் தீயணைப்புத் துறையினரை கொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். பின்னர் அவரது உடலை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.