தோரணம்:
அரை நூற்றாண்டு காலமாக சட்டப்பேரவைத் தொகுதியாக இருந்து வருகிறது எடப்பாடி தொகுதி. கடந்த 1989 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு காலக்கட்டங்களில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வரும் முதலமைச்சர் பழனிசாமிக்கு, எடப்பாடி தொகுதி நான்கு முறை வெற்றிகளையும், இரண்டு முறைத் தோல்விகளையும் பரிசளித்துள்ளது.
இதுவரையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொறுப்புக்காகப் போட்டியிட்டு வந்த பழனிசாமி, இம்முறை அதிமுகவின் அதிகாரப்பூர்வ முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியில் போட்டியிடுவதால் கூடுதல் கவனம் பெறுகிறது இந்தத் தொகுதி.
களம்:
முதலமைச்சர் பழனிசாமி, தனது தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள நலத்திட்டங்களை பட்டியலிடத் தொடங்கினால், அதனைக் குறிப்பெடுத்துக் கொள்ள பத்திரிக்கையாளர்கள் கொஞ்சம் திணறித்தான் போவர்கள்.
ஏறத்தாழ10 நிமிடங்கள் வரை நீளும் அந்தப் பட்டியல். கடந்த 1989ஆம் ஆண்டு எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பழனிசாமி.
பின்னர் 2006ஆம் ஆண்டு தேர்தலில் பாமகவிடம் வெற்றியை பறிகொடுத்தார். அடுத்து வந்த 2011, 2016 தேர்தல்களில் பாமக வேட்பாளர்களை வென்று அமைச்சரானார்; பின்னர் முதலமைச்சரானார்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ முதலமைச்சர் வேட்பாளராக மூன்றாவது தொடர் வெற்றிக்காக தன் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் களம் காண்கிறார் பழனிசாமி. கடந்த முறைகளில் அதிமுகவை எதிர்த்து களமிறங்கிய பாமக இந்த முறை அதிமுகவின் கூட்டணியில் இடம்பெற்றிருப்பதால், அவரை எதிர்த்து திமுக இம்முறை களம் காணலாம்.திமுகவை வெற்றி பெற வைக்கும் குறிக்கோளுடன் அக்கட்சியின் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி பணியாற்றி வருகிறார்.சுடுக்காட்டு மேற்கூரை ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள செல்வகணபதி, மே மாதம் வரை தேர்தலில் போட்டியிட தடையிருப்பதால், தகுதியான வேட்பாளரைத் திமுக தேடிக்கொண்டிருக்கிறது.