முழு ஊரடங்கு உத்தரவை மீறி, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இரு, நான்கு சக்கர வாகனங்களில் பொது மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் சீலநாயக்கன்பட்டி, மாசிநாயக்கன்பட்டி, அயோத்தியாபட்டணம், கருப்பூர் பனமரத்துப்பட்டி பிரிவு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் தற்காலிகமாக சோதனை சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (மே.18), ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய 1009 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 200 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 600க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், முக்கிய பகுதிகள் 'ட்ரோன் கேமரா' மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அம்மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்திலும் தடையை மீறி வெளியே வந்த 130 இரு சக்கர வாகனங்கள், 16 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாமல் தகுந்த இடைவெளியை கடைபிடிக்காத காரணங்களுக்காக ஒரே நாளில் ரூ.1.05 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 நிரந்தர சோதனை சாவடிகளிலும், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 26 சோதனைச்சாவடிகளிலும் பொதுமக்களின் நடமாட்டத்தை காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சுமார் 1900 காவலர்கள், ஊர்காவல் படையினர், போக்குவரத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 1,100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதே போல், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தற்போது வரை 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த 1049 நபர்களிடம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 300 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.