சேலம்: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்து வந்த நிலையில், அதன் விலை கிலோ 100 ரூபாயை எட்டியது. இதைத்தொடர்ந்து, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி திருட்டு அதிக அளவில் நடைபெற்று வந்ததால் தக்காளி வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
குறிப்பாக, இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, புதுரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஒருவாரமாக தக்காளி அதிக அளவில் திருடுபோனது. இந்நிலையில், பெருமாகவுண்டம்பட்டியில் உள்ள ஒரு மளிகை கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது டிப்-டாப்பாக ஸ்கூட்டரில் வந்த ஒரு இளைஞர், காய்கறி கடை முன் வைத்திருந்த தக்காளி பெட்டியை அப்படியே எடுத்து செல்லும் காட்சி பதிவானது.
இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், கடை உரிமையாளர்கள் இந்த திருட்டு குறித்து சேலம் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு தேடியதில், வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் என்பவர்தான் இந்த தக்காளி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, நேற்றிரவு (மே 28) அவரை மகுடஞ்சாவடி காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையினர் விசாரணையில் இவர் ஏற்கனவே சேலம் செவ்வாய்பேட்டையில் ஆப்பிள் பெட்டிகள் திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: மீண்டும் உயருகிறதா தக்காளி விலை? கோயம்பேடு மார்கெட் நிலவரம்!