காலமுறை ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் மாநிலம் தழுவிய அளவில் அரசு மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 95 விழுக்காடு அரசு மருத்துவர்கள் நான்காவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் தொடர் போராட்டத்தால் குடும்பக்கட்டுப்பாடு, எலும்பு முறிவு, பிரசவம் உள்ளிட்ட அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிர் காக்கும் அவசர அறுவை சிகிச்சைகள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் பணியையும் புறக்கணித்துள்ளனர்.
இது போன்று அரியலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.