சேலம்: இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 24 ஆயிரத்து 278 பேர் எழுத்துத் தேர்வு எழுதினர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பதவிக்கு 10,906 பணியிடங்களுக்கான தேர்வுக்கு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கான எழுத்து தேர்வு இன்று (டிசம்பர் 13) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சேலத்தில் இன்று தேர்வு எழுத மாணவ மாணவியர் தேர்வு மையத்திற்கு காலையிலிருந்து குவிய தொடங்கினர். மேலும், விண்ணப்பித்திருந்த தேர்வர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அடையாள அட்டை, கறுப்பு முனை கொண்ட பேனாவுடன் தேர்வு மையங்களுக்கு வந்திருந்தனர்.
கரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அனைவருக்கும் உடற்சூடு கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி கொடுக்கப்பட்டு, உரிய சோதனைக்கு பின்னரே தேர்வுவெழுத அனுமதி வழங்கப்பட்டது. தேர்வு நேரம் காலை 11 மணி முதல் 12 .20 வரை என்றும் 80 நிமிடங்கள் எழுத்துத்தேர்வு நடைபெறும் என்பதும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சேலம் அம்மாபேட்டை, உடையாப்பட்டி, கருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள தனியார் கல்லூரிகளில் உள்ள 17 தேர்வு மையங்களில், விண்ணப்பித்திருந்த பெண்கள் 3179 பேர் உள்பட மொத்தம் 24,278 பேர் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வினை எழுதினர். தேர்வு மையங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.