சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் 20 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நங்கவள்ளி கைலாஷ் மகளிர் கல்லூரி, பவளத்தானூர் வேதாத்திரி மகரிஷி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாரமங்கலம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி, ஓமலூர் பத்மவாணி மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையங்களையும் பயிற்சி வகுப்புகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் சி.அ. ராமன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களைச் சந்தித்து பேசிய அவர், "சேலம் மாவட்டத்தில் இரு கட்டங்களாக மொத்தம் 2,741 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த பணியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாக 2,953 பேரும், வாக்குப்பதிவு அலுவலர்களாக 18,692 பேரும் மொத்தம் சுமார் 21,600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேர்தல் நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி இத்தேர்தலை மிகச்சிறப்பாக எவ்வித குறைபாடுகளுமின்றி சிறப்பான முறையில் நடத்திட வேண்டும்" என்றார்.
மேலும், "ஏற்கனவே இதுபோன்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இத்தேர்தல் குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டுள்ள கையேடுகளை முழுமையாகப் படித்து தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். இந்த தேர்தல் முழுக்க, முழுக்க வாக்குச் சீட்டு முறையில் நடைபெறுவதால் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சீட்டுகளை முழுமையாக சரிபார்த்து அதில் கையொப்பம் இடவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: அரிட்டாபட்டி கிராமத்தையே அழகு ஓவியங்களாய் பிரதிபலித்த மாணவர்கள்