சேலம் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில், அஸ்தம்பட்டியில் உள்ள தொங்கும் பூங்கா வளாகத்தில் பல்நோக்கு சமுதாயக்கூடம் அமைக்கப்பட்டுவருகிறது. தொங்கும் பூங்கா வளாகத்தில் 1992ஆம் ஆண்டு திருமண மண்டபம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. பின்னர் அந்தக் கட்டடத்தில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் செயல்பட்டுவந்தது.
இதையடுத்து, 2013ஆம் ஆண்டு கோட்டையில் இருந்த சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம், புதிய கட்டடம் அமைக்கும் பணிகளுக்காக தொங்கும் பூங்கா வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டுவந்தது.
இதைத் தொடர்ந்து, சங்க வளாகத்தில் உள்ள கட்டடங்களை அகற்றி பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்நோக்கு சமுதாயக்கூடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டன. அதன்படி, 2019ஆம் ஆண்டு சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில், தொங்கும் பூங்கா வளாகத்தில் பல்நோக்கு சமுதாயக்கூடம் அமைக்கும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், இந்த சமுதாயக்கூடத்தில் நிகழ்வு அரங்கம், உணவு அருந்தும் அரங்கம், மேல் கூரை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் சதீஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் புதிய பல்நோக்கு சமுதாயக்கூடம் கட்டி முடிக்கப்படும். ஒரே நேரத்தில் 440 பேர் அமரும் வகையில் உணவருந்தும் அரங்கமும், நவீன சமையலறை கூடமும் கட்டப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மக்களுக்கு செய்து தரப்படும் என்று கூறினார்.