தனிமைப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா மையங்களை மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் மாவட்டத்திற்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகைதரும் நபர்களை தனிமைப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள மையங்களான 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதிகள், சேலம் பெரியார் பல்கலைக்கழக தங்கும் விடுதி மற்றும் சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடி ஆகிய இடங்களை ஆய்வு மேற்கொண்டேன்.
இவ்விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து நபர்களுக்கும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் எவ்வித தங்குதடையின்றி கிடைக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒரு சிலர் கோவிட்- 19 நோய்த் தொற்றின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல் தெருக்களிலும், சாலைகளிலும் தேவையின்றி நடமாடுகின்றனர். பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து, வெளியில் சுற்றுவதை தவிர்த்திட வேண்டும். பொதுமக்கள், அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதோடு, கரோனா நோய்க் கிருமித் தொற்று பரவாமல் தடுத்திட முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளி ஆகியவற்றை முழுமையாக பின்பற்றிட வேண்டும்" என்றார்.