சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க, தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனத் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் ஆட்டையாம்பட்டி எஸ்.பாலம் பகுதியில் பறக்கும் படை அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பெங்களூருவிலிருந்து அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், ஏழு லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பணத்தைக் கொண்டு வந்த பெங்களூருவை சேர்ந்த பாலசுரேஷிடம் அதிகாரிகள் விசாரித்ததில், கார் வாங்குவதற்காக பணத்தை எடுத்துக் கொண்டு திருச்செங்கோடு செல்வதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால், அப்பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட அப்பணத்தை, உரிய ஆவணங்களை அளித்து உரிமையாளர் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரிக்கு சொந்தமான 25 இடங்களில் செக்.. சேதாரம் பார்க்கும் வருமான வரித்துறை..