சேலம்: பெங்களூருவில் இருந்து லாரிகள் மூலம் சேலம் வழியாக தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களுக்குத் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை கடத்திச் சென்று விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் கதிரவன் உள்ளிட்ட அலுவலர்கள், பெங்களூரு - சேலம் நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டி பகுதியில் சரக்கு ஏற்றப்படாத நிலையில் காலியாக லாரி ஒன்று நெடுஞ்சாலை ஓரமாக நின்றிருந்ததைக் கண்ட அலுவலர்கள், அந்த லாரியின் அருகே சென்றனர்.
தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்
அப்போது, லாரியில் இருந்த ஓட்டுநரைக் கண்ட அலுவலர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரித்ததில் அவர் சேலத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பது தெரியவந்தது. இதையடுத்து, தார்ப்பாய் மூடப்பட்ட நிலையில் இருந்த 200க்கும் மேற்பட்ட மூட்டைகளை அலுவலரகள் சோதனை செய்தனர். சோதனையில் அனைத்தும் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் எனத் தெரியவந்தது.
இதனையடுத்து, லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களை சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வளாகத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பெங்களூருவிலிருந்து திண்டுக்கல்லுக்கு லாரிகள் மூலம் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சோதனை செய்தோம்.
லாரி ஓட்டுநரிடம் விசாரணை
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த இந்த லாரியை சோதனையிட்டோம். அதில் 67 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா, பான்பராக், பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.
லாரி மற்றும் ஓட்டுநரை தடைசெய்யப்பட்ட பொருட்களோடு நீதிமன்றத்தில் ஒப்படைப்போம். அதன் பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடவடிக்கைகள் சட்டப்படி மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆம்பூர் அருகே ரூ.3 லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல்