சேலம்: எருமாபாளையம் அடுத்து ஜருகுமலை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மேலூர், கீழூர் என்று இரண்டு மலை கிராமங்கள் உள்ளன.
இந்த இரண்டு கிராமங்களிலும் சுமார் 700 பழங்குடியினர் வசிக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக ஜருகுமலையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் ஊற்று உருவாகியுள்ளது.
மண் சரிவு
அண்மையில் மலை பாதையில் தார் சாலை அமைக்கப்பட்டது. தொடர்மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது.
நேற்று (ஜூலை 28) மாலையிலிருந்து அதிகளவில் மண் சரிந்த நிலையில், பத்தடி உயரமுள்ள ராட்சத பாறை உருண்டு சாலையில் விழுந்தது.
இதனால் மலை பகுதியிலிருந்து அத்தியாவசிய வேலைக்கு கீழே செல்ல முடியாமலும், சேலத்திலிருந்து மேலுள்ள கிராமங்களுக்கு செல்ல முடியாமலும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
மக்கள் பாதிப்பு
தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள் பாறைகளை சிறிது சிறிது துண்டுகளாக வெட்டி அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்தப் பணிகள் நிறைவுபெற மூன்று நாள்கள் ஆகும் என அலுவலர்கள் தெரிவித்தனர். பாறை சாலையில் விழுகின்றபோது, பொழுதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.
மலையிலிருந்து பாறை உருண்டு விழுந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அமெரிக்காவில் விமான விபத்து- 6 பேர் உயிரிழப்பு!'