தனது இறுதிக்கட்ட தீவிர தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டி பகுதியில், வீரபாண்டி தொகுதி வேட்பாளர் தருண் மற்றும் ஏற்காடு தொகுதி வேட்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரை ஆதரித்து பேசினார்.
அப்போது, "எதிர்வரும் தேர்தலில் திமுக 170 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் என தனியார் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் 234 தொகுதிகளிலும் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும். திமுகவின் தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்துள்ள அதிமுக, அதில் கூடுதலாக உண்மைக்கு மாறான வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.
ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தெரிந்து விட்டதால் அடுத்தக்கட்டமாக, வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர் வழங்குவேன் என்றுகூட எடப்பாடி பழனிசாமி கூறுவார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்கும், ஆறுமுகசாமி ஆணையம் ஏன் அமைதியாக இருக்கிறது. தர்மயுத்தம் தொடங்கிய பன்னீர்செல்வம் ஏன் அமைதியாக இருக்கிறார். திமுக கொடுத்த நெருக்கடியால்தான் ஜெயலலிதா இறந்ததாக புதுக்கதையை பழனிசாமி கூறியுள்ளார். வேண்டுமானால் ஆறுமுகசாமி ஆணையம் என்னை அழைக்கட்டும். அதில் ஆஜராகி உண்மையை வெளிக்கொண்டு வர நான் தயாராக இருக்கிறேன்.
கூட்டுறவு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என, சட்டப்பேரவையில் நான் தெரிவித்த போது அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று மறுத்த முதலமைச்சர் பழனிசாமி, இன்று எப்படி தள்ளுபடி செய்தார்" என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்காக தொண்டர்கள் மொட்டை