சேலம்: சங்ககிரி அடுத்த அக்கமாப்பேட்டை பகுதியில் சேலத்திலிருந்து, ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது திடீரென எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக, ஓட்டுநர் இடதுபக்கம் பேருந்தை திருப்பியுள்ளார்.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர், சங்ககிரி அடுத்த பழைய எடப்பாடி சாலை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியாவார்.
பேருந்தில், மொத்தம் 48 பேர் பயணித்த நிலையில், 34 நபர்கள் லேசான காயத்துடன் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மீதமுள்ள 14 நபர்கள் பலத்த காயமடைந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பேருந்தின் நடத்துநர் பச்சமுத்து (51) தலையில் பலத்த காயமடைந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். விபத்து குறித்து சங்ககிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Viral Video: கீழே போட்ட எலும்பு...மீண்டும் சூப்புக்குள் வந்தது எப்படி..?