சேலம்: காடையாம்பட்டி அருகே உள்ள பெரிவடகம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருக்கு இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில், மூத்த மகள் பவித்ரா சேலம் தனியார் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகிறார்.
கடந்த ஜனவரி 27ஆம் தேதி காலையில் இருந்து தனது மூத்த மகள் பவித்ராவை காணவில்லை என்று தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் அண்ணாமலை புகார் அளித்தார்.
அந்த புகாரில், எங்கள் ஊரை சேர்ந்த பாராலிம்பிக் விளையாட்டு வீரர் மாரியப்பனின் தம்பி கோபி, தனது மகளை கடத்தி சென்று விட்டதாகவும், மகளை மீட்டு தரவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
காவல் நிலையத்தில் திருமணம்
அந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர், மகள் பவித்ரா, மாரியப்பன் தம்பி கோபி குறித்து விசாரித்து வழக்குப்பதிவு செய்து இளம்பெண் கடத்தல் குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், நேற்றிரவு (ஜன.28) கோபி, பவித்ரா ஆகிய இருவரும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். காவலர்கள் அவர்களை தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதில், நேற்றிரவு சுமார் 11 மணியளவில் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கோபி, பவித்ரா ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து, மகளிர் காவல்துறையினர் இருதரப்பினர் பேச்சு வார்த்தைக்கு பின் பெண்ணின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட கோபியுடன் அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் பெண் காவலர்களின் பணிநேரம் குறைப்பு.. தாக்கரே அரசு நடவடிக்கை!