சேலம்: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சேலத்தில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. மேலும் ஏற்காட்டில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்காட்டில் இருந்து வரும் மழைநீரானது, சேலம் நான்கு ரோடு அருகே ஓடையில் பெருக்கெடுத்து ஓடியது.
ஓடையானது தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழை நீர் முழுவதும் சாலையில் வெளியேறி நான்கு ரோடு அருகே உள்ள கோவிந்த கவுண்டர் தோட்டம், பெரமனூர் ஆகியப் பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு கார்கள் ஆகியவை மழை நீரில் மூழ்கின.
இதனால் இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் உறங்க இடமின்றி வீட்டில் மொட்டை மாடியில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
சேலத்தில் கனமழையின் காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதில் தண்ணீரில் மூழ்கிய மூதாட்டிகள் இருவர் பரிதாபமாக உயிரிந்தனர். இப்பகுதியில் உள்ள சாக்கடைப் பணிகள் முழுமை பெறாததாலும் ஓடை தூர்வாரப்படாததாலும் இது போன்ற அவலத்தை, ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் தாங்கள் சந்திப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை பொதுமக்கள் வெளியேற்றி வருகின்றனர் .
மேலும் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த ராட்சத ஓடையைத் தூர்வாரி சாக்கடைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: நீலகிரி வனப்பகுதி சாலையில் காட்டு யானைகள் உலா