தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலத்தில் மேட்டூர் அணை திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் வந்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகைதந்து, திமுகவின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பொதுமக்களிடம் இருந்து வாங்கப்பட்ட புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, மாற்றுத்திறனாளிக்கு வாகன உதவியும், பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கினார்.
நலத்திட்டங்கள்
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் அரசு பள்ளிக்கு தேவையான சுற்றுச்சுவர் அமைக்கவும், சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நீர்த் தொட்டி அமைக்கவும் உரிய ஆணைகளை வழங்கினார்.
பின்னர் முதலமைச்சரிடம் இலவச மூன்று சக்கர வாகனத்தைக் காண சாவியைப் பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளி ஒருவர், முதலமைச்சர் குறித்து கவிதை மூலம் நன்றி தெரிவித்தார். தனக்கு நன்றி தெரிவித்த அவருக்கு மு.க. ஸ்டாலின் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சதாசிவம், அருள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், கே.என். நேரு, செந்தில் பாலாஜி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.