சேலம் மாநகராட்சி சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ், சுமார் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகர் கிச்சிப்பாளையம் பகுதியில் சாலைகள் மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் முடிவடையாத காரணத்தால், சாக்கடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல், கடந்த 6 மாதத்திற்கும் மேலாக அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தற்போது மழைக்காலம் என்பதால் அவ்வப்போது பெய்யும் மழை நீர் சாக்கடை நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுவதால், சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனையடுத்து இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் இன்று(ஆகஸ்ட் 4) திடீர் ஆய்வு மேற்கொண்டார் .
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் நாடாளுமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு, அப்பகுதியில் உள்ள பிரச்னைகளைக் கொட்டித் தீர்த்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆய்வின்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய எஸ்.ஆர். பார்த்திபன், இப்பகுதியில் நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கும் சாக்கடை அமைக்கும் பணிகள் மற்றும் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்தார்.