சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கட்டடங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் வர்ணம் பூசும் தொழில் செய்துவருகிறார். இவருக்கு திருமணமாகி தேவி என்ற மனைவியும் சந்தோஷ், தனுஷ் என்ற இரண்டு ஆண்குழந்தைகளும் உள்ளனர்.
சிலம்பரசனின் போரட்டமும் சிறை வாசமும்:
சிலம்பரசன் சில சமயம் பொதுமக்கள் நலனுக்காக போராட்டங்களில் ஈடுபடும் குணம் உடையவர் என்பதால், அவரின் பெயரில் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சாலை மறியல் செய்த வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் கடந்த 10 நாட்களுக்குப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார், சிலம்பரசன்.
காவல் துறையினரும் வழக்குகளும்!
இதனிடையே தீபாவளிப் பண்டிகையையொட்டி பல்வேறு வழக்குகள் பதிவு செய்யும் முனைப்பில் கிச்சிப்பாளையம் காவல் துறையினர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்வதற்காக சிலம்பரசனை கிச்சிப்பாளையம் காவல் துறையினர் தேடி வந்தனர்.
காவல் துறையினர் சிலம்பரசன் குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டல்:
காவல் துறையினர் சிலம்பரசன் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக, 25 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று சிலம்பரசனிடமும் அவரின் குடும்பத்தினரிடமும் கேட்டு வற்புறுத்தி உள்ளனர். இதற்கு ஒத்துழைக்காத சிலம்பரசனை காவல் துறையினர் கைது செய்ய வீடு தேடி வந்துள்ளனர்.
அப்போது வீட்டில் அவரின் மனைவி தேவியும், மகன்களும் இருந்துள்ளனர். காவல் துறையினர் சிலம்பரசன் குடும்பத்தினரைத் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை காவல் நிலையத்திற்கு வருமாறு மிரட்டும் தொனியில் பேசி விட்டு சென்றுள்ளனர்.
காவல் நிலையத்தில் சிலம்பரசன் தீக்குளிப்பு:
இதனைத் தொடர்ந்து, காவல் நிலையம் சென்ற சிலம்பரசன் மண்ணெண்ணெய் ஊற்றி தனது உடலில் தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
சிலம்பரசனும் மருத்துவமனை சிகிச்சையும்:
தற்போது சேலம் தனியார் மருத்துவமனையில் சிலம்பரசன் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக சிலம்பரசனின் மனைவி தேவி கூறுகையில், " திருந்தி வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு போராட்டங்கள் எதுவும் நடத்தாமல் சிலம்பரசன் தற்போது அமைதியாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் காவல் துறையினர் அவரைக் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என்று நடவடிக்கை எடுத்ததால், எனது கணவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். காவல் துறையினரின் தொடர் துன்புறுத்தல் காரணமாக தான் என் கணவரின் இந்த நிலைமைக்குக் காரணம். எங்களை வாழ விடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். மேலும் காவல் நிலையம் முன்பு கட்டட வர்ணம் பூசும் ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வறுமையின் கோர பிடியில் தத்தளித்த குடும்பம்... கூட்டாகத் தற்கொலை?