சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (45). இவர் வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் சென்னையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வந்து தங்களிடம் இரிடியம் இருக்கிறது. இதை விற்றால் பல கோடி லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய பிரவீன்குமார் பல தவணைகளாக ரூ.55 லட்சம் வரை பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் சென்னை கும்பல், பிரவீன்குமாரை அழைத்துச் சென்று கருப்பு பெட்டி ஒன்றை காண்பித்து இதற்குள் இரிடியம் இருக்கிறது. இதற்கென தனி உடை உள்ளது. இந்த உடை அணிந்து கொண்டுதான் இரிடியம் இருக்கும் பெட்டியை திறக்க முடியும் என கூறினர். இந்த தனி உடை வாங்க மேலும் பணம் தருமாறு அக்கும்பல் கேட்டுள்ளனர்.
இதில் சந்தேகமடைந்த பிரவீன்குமார் சேலம் மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறை தரப்பில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு சென்னையைச் சேர்ந்த தினேஷ் குமார், சிவக்குமார், சேலத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் என நான்கு பேரையும் கைது செய்தனர்.
இதுதவிர இந்க வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இரண்டு பேரை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த மோசடி கும்பல் கொடுத்த கருப்பு பெட்டியை தனிப்படை காவலர்கள் சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு எடுத்துச் சென்று வெடிகுண்டு நிபுணர்கள் முன்னிலையில் திறந்து பார்த்தனர். அப்போது அந்த கருப்பு பெட்டிக்குள் பஞ்சு முழுவதும் வைத்து, ஒரு வித ரசாயனம் கொட்டப்பட்டு இருந்தது. மற்றபடி இரிடியமோ அல்லது வேறு எந்த பொருளும் அதில் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.