இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், சுகாதார மேம்பாட்டு பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்நிலையில், பருவமழை காலத்தையொட்டி, மாநகரப் பகுதிகளில் தீவிர தூய்மைப் பணிகளும், நோய்த் தடுப்புப் பணிகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களில் உள்ள 60 கோட்ட பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்வதோடு, 2,060 தூய்மைப் பணியாளர்கள், 60 மலேரியா பணியாளர்கள், 60 சுகாதார மேற்பார்வையாளர்கள், 700 கொசுப்புழு கண்டறிந்து நீக்கும் பணியாளர்கள் மற்றும் 30 பரப்புரையாளர்கள் என மொத்தம் 2,910 களப்பணியாளர்கள் தீவிர டெங்கு நோய்த் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில், 56 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மூலம் உரிய கால இடைவெளியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் நலன் கருதி திரவ குளோரின் கலந்து மாநகராட்சி பகுதிகளில் உரிய இடைவெளியில், சீரான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் தங்களின் தேவைக்கு அதிகமாக குடிநீரை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்காமல், மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீரை மாற்றி வைத்து, குடிநீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், பிளாஸ்டிக் டிரம்கள், சிமெண்ட் தொட்டிகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் ஆகியவற்றை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.
மாநகர் பகுதிகளில் உள்ள காலிமனைகளில் உள்ள குப்பைகள், முட்புதற்கள் மற்றும் மழைநீரினை சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள், தொற்று நோய் ஏற்படாத வகையில் சுத்தப்படுத்தி பராமரித்திட வேண்டும்.
மேலும், மாநகரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் திரையரங்குகள், தனியார் மருத்துவமனைகள், தனியார் பள்ளி / கல்லூரிகள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள், தேநீர் விடுதிகள், உணவகங்கள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பதோடு, பயன்படாத இரும்பு பொருள்கள், எரிபொருள் கேன்கள், உடைந்த உதிரி பாகங்கள், பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் தீவிர டெங்கு நோய் தடுப்பு பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்". இவ்வாறு அவர் கூறினார்.