சீனாவில் தொடங்கி உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளுக்கும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. சீனாவில் மட்டும் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை கரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்க எந்தவொரு மருந்தும் கண்டறியப்படாத நிலையில், சேலம் குகைப் பகுதியில் செயல்பட்டுவரும் ரவி ஹோமியோ மருந்தக விற்பனை நிலையத்தில் "கரோனோ வைரஸ் தொற்றுக்கு இங்கு மருந்து கிடைக்கும்" என விளம்பர பலகையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருந்தக உரிமையாளர் ஜீவரத்தினத்திடம் கேட்டபோது ”ஹோமியோபதியில் வழங்கப்படும் ஆர்சினிகம் ஆல்பம் 30 என்ற மருந்தினை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் ஏழு நாட்கள்வரை உட்கொண்டால், கரோனா வைரஸ் தொற்று ஏற்படாது. இந்த மருந்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார். மேலும் தங்களுடைய மருந்தகத்திலிருந்து இதுவரை யாரும் கரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்தை வாங்கி செல்லவில்லை எனவும் இந்த ஹோமியோபதி மருந்தை முன்னெச்சரிக்கைக்காகவும் உட்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
இந்த மருந்து குறித்து அரசு மருத்துவமனையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, இந்த மருந்தினை கரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்தாக மணிப்பூர் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா பீதி - 'சிக்கன் சாப்பிடலாம்; பயப்பட வேண்டாம்'