சேலத்தில் கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. வானம் காலை முதல் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் பிற்பகலில் லேசான மழை பெய்தது .
தொடர்ந்து, மாலையில் கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கு அதிகமாக கொட்டிய கன மழையால் சேலம் மாவட்டம் ஓமலூர், இளம்பிள்ளை, மகுடஞ்சாவடி, அயோத்தியாபட்டணம், மற்றும் சேலம் மாநகரப் பகுதி முழுவதும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது .
அதேபோல், சேலம் மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து தாழ்வான பகுதிகளில் இருக்கும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
பச்சப்பட்டி, கிச்சிபாளையம், குகை ராமலிங்க சௌடேஸ்வரி தெரு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
குகை ராமலிங்க கோயில் தெரு குடியிருப்பு பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது .
இதனால், பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். தொடர்ந்து மாநகராட்சி உயர் அலுவலர்களிடம் பலமுறை புகார் கொடுத்தும் சாக்கடைகளை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இதுவரையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை எனக் குற்றம் சாட்டினர்.
சாதாரண மழைக்கே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
சேலம் மாநகரப் பகுதியில் உள்ள சாக்கடைகளை முழுமையாக மாநகராட்சி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
தற்போது மழைக்காலம் என்பதால், வெள்ளத்தால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று குகைப் பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.