வெள்ளக் காலங்களில் முழு கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டும் போது வெளியேற்றப்படும் உபரிநீர், வீணாக கடலில் கலக்கிறது. இதனை விவசாய நிலங்களுக்கு பயன்படும் வகையில், ரூ.565 கோடி நிதி ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டம், சரபங்கா வடி நிலத்திலுள்ள 100 வரண்ட ஏரிகளில், மேட்டூர் அணையின் உபரி நீரை நிரப்பும் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்து கொண்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் 62.63 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 36 பணிகளை திறந்து வைத்தும், 5 கோடியே 36 லட்ச ரூபாய் மதிப்பில் 23 புதிய திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய முதலமைச்சர், “தஞ்சையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து டெல்டா பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்தது அதிமுக அரசுதான். கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு முறை பயிர்கடனை ரத்து செய்துள்ளோம். காவிரியை கடைமடை வரை தூர்வாரியதால் தண்ணீர் அனைத்து பகுதிகளிலும் சென்று விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளோம்.
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்படும். நீர் மேலாண்மையில் தமிழகம் 2019-20 தேசிய விருது பெற்றுள்ளது. ரூ.14,400 கோடியில் காவிரி குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை ரூ.10,711 கோடியில் செயல்படுத்த மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம். வீடில்லா அனைத்து வேளாண் தொழிலாளர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முகநூல் பதிவு”