சேலம்: நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் இறந்துள்ளனர்.
மருத்துவர் சண்முகப்பிரியா மறைவு
கரோனா சிகிச்சைக்கான களப்பணியில் இருந்த மதுரை மாவட்டம் அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சண்முகப்பிரியா கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கரோனா தொற்று தடுப்புப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட மருத்துவர் சண்முகப்பிரியா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
கரோனா காலப் பணியில் இருந்து விலக்கு
இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கரோனா காலப் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், பணியாளர்கள் ஒருங்கிணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.