சேலம் மாவட்டம், ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்டக் கழக அலுவலகத்தில் மாநகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமையேற்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது, ”நவம்பர் 1ஆம் தேதி திருத்திய வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. ஆதலால் நாம் தேர்தலுக்குத் தயாராக வேண்டும்” என்றார்.
சேலம் ’அதிமுக கோட்டை’ என நிரூபிப்போம்!
தொடர்ந்து பேசிய அவர், ”வாக்காளர் பட்டியலை முழுமையாக ஆய்வு செய்து விடுபட்டவர்களை சேர்க்கவும், இறந்தவர்களை நீக்கவும் பகுதிக் கழக நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் மகளிர், பாசறை உறுப்பினர்களை நியமித்து ஒவ்வொரு வீடாகச் சென்று ஆய்வுசெய்ய வேண்டும்.
தமிழ்நாட்டிலேயே சேலம் மாநகராட்சிக்கு பாதாள சாக்கடைத் திட்டம், மேம்பாலங்கள், தனிக்குடிநீர் திட்டம், பூங்காக்கள், ஸ்மார்ட்சிட்டி திட்டங்கள், மின்சாரக் கேபிள் பதிக்கும் திட்டம் ஆகியவற்றைத் தந்துள்ளோம். இதனை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். சேலம் மாநகராட்சியில் 60 கோட்டங்களிலும் வெற்றி பெற்று, அதிமுகவைச் சேர்ந்தவரை மேயராக்கி, சேலம் மாநகரட்சி ’அதிமுகவின் கோட்டை’ என்பதை நிரூபிக்க வேண்டும்” என்றார்.
வெறும் அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் அல்ல!
தேர்தல் நேரத்தில் அறிவித்த 525 வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் நிறைவேற்றப்படும் என்று ஸ்டாலின் கூறினார். தற்போது 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகக் கூறுகிறார். வெறும் அறிவிப்பை வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகக் கருத முடியாது.
ஆட்சிப் பொறுப்பேற்று 150 நாள்கள் ஆகிய நிலையில் நீட் தேர்வு ரத்து என்று கூறியது என்ன ஆனது? குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய் உதவித்தொகை, எரிவாயு உருளை மானியம், கல்விக்கடன், சுய உதவிக்குழு கடன் ரத்து, முதியோர் உதவித்தொகை உயர்த்தி தருவது போன்ற திட்டங்கள் என்ன ஆனது?
தலைதூக்கும் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து
அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு கட்டுபாட்டில் இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம், அராஜகம் அதிகரித்துவிட்டது.
தற்போது மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் உள்ளனர். அவர்களிடம் அதிமுக செய்த சாதனைகளை எடுத்துகூற வேண்டும். தற்போது உள்ள விஞ்ஞான காலகட்டத்துக்கு ஏற்ப அரசியல் யுக்திகளைப் பயன்படுத்த வேண்டும். திறமையானவர்கள், விசுவாசமானவர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
இக்கூட்டத்தில், கழக அமைப்புச் செயலர் செம்மலை, மாநகர் மாவட்டச் செயலர் வெங்கடாசலம், மாநகர அவைத் தலைவர் பன்னீர்செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், மணி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.கே.செல்வராஜ், சக்திவேல், பகுதிக் கழக நிர்வாகிகள், டிவிசன் செயலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: காங்கிரஸிற்கு டா டா... தனிக்கட்சி... கேப்டன் அமரீந்தர் அதிரடி!