மயிலாடுதுறையில் விவசாயிகள் தற்போது பருத்தி அறுவடை பணியை மேற்கொண்டுவருகின்றனர். விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த பருத்தியை அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் விற்பனை செய்வது வாடிக்கை.
ஆனால், பருத்தி விலையை அரசு முறையாக நிர்ணயம் செய்யாததால், தற்போது குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் விற்பனை செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்தும், பருத்தி விலையை நிர்ணயம் செய்யக்கோரியும் மயிலாடுதுறை காவிரி நகரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.