சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதி, நங்கவள்ளி ஒன்றியத்திற்குள்பட்ட வீரக்கல்புதூர் பேரூராட்சி, புதுச்சாம்பள்ளியில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 26) ரயில்வே இருப்புப்பாதை சுற்றுச்சுவர் கட்டும் பணியின்போது பழைய சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் 11 பேரின் குடும்பத்தாரையும், விபத்தில் உயிரிழந்த கவிதா குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் திமுக சேலம் மாவட்ட மேற்கு பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி நேரில் தெரிவித்தார்.
மேலும், கவிதாவின் குடும்பத்திற்கு, ரூ.25,000 வழங்கினார். அதே சமயம் இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வேயில் பணி வழங்க வேண்டும், விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திடமும், ஒப்பந்ததாரரிடமும் செல்வகணபதி கோரிக்கைவைத்துள்ளார்.
இந்நிகழ்வில், மாவட்ட அவைத்தலைவர் பா. கோபால், மாவட்ட துணைச் செயலாளர் த. சம்பத்குமார், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் கே.எம். ரவிச்சந்திரன், மேட்டூர் நகரச்செயலாளர் எஸ்.ஜி. காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.