நாடு முழுவதும் கடந்த 10ஆம் தேதி முதல் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்திவருகின்றன. அதன் இறுதி நாளான இன்று சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "மத்திய அரசின் மிக மோசமான பொருளாதாரக் கொள்கையால், நாடு முழுவதும் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டும் பொதுப்பணித்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டும்வருகின்றன. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் செய்பவர்கள் நசுக்கப்பட்டுவருகின்றனர். இது குறித்து அக்கறையில்லாத பாஜக அரசு பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே சேவைகளையும் சலுகைகளையம் வாரி வழங்கிவருகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் வகிக்கும் பதவிக்கு ஏற்றார்போல் பேசுவதில்லை. அவர் தகுதியும் திறமையும் இல்லாதவர். நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் திமுக தலைவரை ஸ்டாலினை, ஏன் லண்டன் செல்கிறார் என்று கேள்வி மட்டுமே எழுப்பிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அவருடைய வெளிநாட்டுப் பயணத்தால் எந்த வகை நன்மையும் கிடையாது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "முதலமைச்சராகும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது நீங்கள் தான்" - உருகிய எடப்பாடி!