சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், வலசக்கல்பட்டி ஏரியானது சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு அருகில் உள்ள பச்சமலை பகுதியில் பெய்யும் மழைநீர் இந்த ஏரிக்கு வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களாக பச்சமலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த ஏரி நிரம்பி கடந்த சிலநாட்களாக உபரி நீர் வெளியேறி வருகின்றது.
இந்த ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுவேதா நதியில் கலக்கிறது. இந்த ஏரியின் வாயிலாக பாசனத்தின் மூலம் சுமார் 700 ஏக்கர் நிலம் பயன்பெறுகிறது. வலசக்கல்பட்டி ஏரியானது 60 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. நேற்றைய தினம் பச்சமலை பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக அதிகபட்சமாக இந்த ஏரியில் இருந்து 12,000 கனஅடி நீர் வெளியேறியது.
தற்போது இந்த ஏரியிலிருந்து 6,000 கனஅடி நீர் வெளியேறி வருகின்றது. ஏரியிலிருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேறி வருவதால் வாய்க்கால்களுக்கு அருகில் உள்ள பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறும், தங்களது கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் ஏரி மற்றும் நீர் வழிந்தோடும் வாய்க்கால்களில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் மூலம் பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏரிகளில் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதை தவிர்த்திட வேண்டும். ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகள், மழைநீர் வழிந்து வெளியேறும் வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளை தூர்வாரி வழிந்தோடும் நீர் தடையில்லாமல் வெளியேறவும், மதகுகள் சீர்செய்து, பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ள பொதுப் பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், உதவி இயக்குநர் கோபிநாத் மற்றும் பொதுப் பணித்துறை (சரபங்கா வடிநிலக் கோட்டம்) செயற்பொறியாளர் கௌதமன், கெங்கவல்லி வருவாய் வட்டாட்சியர் சிவக்கொழுந்து உட்பட பல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:
5 வருடங்களுக்குப்பிறகு கடைமடைப் பகுதியில் நிரம்பிய நீர்நிலைகள் - பொதுமக்கள் மகிழ்ச்சி