சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 12ஆம் தேதி நீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பைப் பொறுத்து ஜுன் 12ஆம் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த அணையின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்கள் பயன்பெறுகிறது. தமிழ்நாட்டில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சலுக்கு நீரை அளிப்பதில் மேட்டூர் அணையின் பங்கு மிக முக்கியமானதாகும்.
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் 11:25 மணிக்கு நீர் திறந்து வைத்தார். பின்னர் அவர் நீரில் மலர்களைத் தூவி வரவேற்றார். அணை வரலாற்றில் 1934ஆம் ஆண்டு முதல் இதுவரை 87 முறை அணை திறக்கப்பட்டுள்ளது. இன்று 88ஆவது முறையாக மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் உரிய நேரத்தில் அதாவது ஜுன் 12ஆம் தேதி திறக்கப்படும் பொதுநிகழ்வில், 18ஆவது முறையாக சரியான தருணத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஜுன் 12ஆம் தேதிக்கு முன்னதாக 10 முறையும்; காலதாமதமாக 60 முறையும் மேட்டூர் அணை டெல்டா பாசன வசதி பெறும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக சரியான நேரத்தில் நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டும் அல்லாமல் கடைமடை வரை பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணி நடப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாயப் பணிகளைத் தொடங்கி உள்ளனர்.
மேட்டூர் அணை இன்றைய நிலவரம்:
💧நீர்மட்டம் : 96.810 அடி.
💧நீர்இருப்பு : 60.784 டி.எம்.சி.
💧நீர் வரத்து : விநாடிக்கு 1170 கன அடியாக உள்ளது.
💧வெளியேற்றம் : குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 'வடலூர் சத்திய ஞான சபையின் சர்வதேச மையம் விரைவில்' - அமைச்சர் சேகர்பாபு