சேலம்: காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் இன்று நீர் திறந்து விடுகிறார். இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பயன் பெறுகிறது.
இதனை முன்னிட்டு நேற்றே திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் உள்ள காவிரி படுகைகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். கல்லணையில் ஆய்வு மேற்கொண்ட அவர், தூர்வாரப்படும் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் நேற்று திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தார். அவரை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இன்று காலை 10: 30 மணிக்கு முதலமைச்சர் நீர் திறந்து விடுகிறார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.