சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோடு அருகே கால்நடை பராமரிப்புத் துறைக்குச் சொந்தமான 900 ஏக்கர் நிலத்தில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா, கால்நடை மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
தற்போது, ஆயிரம் கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்காவையும், கல்லூரியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 22) திறந்துவைக்கிறார்.
மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ள இப்பூங்காவின் முதல் பிரிவில் கால்நடைப் பண்ணை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பிரிவில் பால், இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவுப்பொருள்களைப் பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றிலிருந்து பல்வேறு துணைப் பொருள்கள், மதிப்புகூட்டிய பொருள்களைத் தயார் செய்யவும், அவற்றைச் சந்தைப்படுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது பிரிவில் பயிற்சி, கல்வி, ஆராய்ச்சி, தொழில்முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் உள்ளன.
இந்த நவீன பூங்கா தமிழ்நாட்டில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற அனைத்து மாணவர்களும் பயிற்சி மேற்கொள்ளவும், உலக நாடுகளில் உள்ள கால்நடை மருத்துவம் படிக்கின்ற மாணவர்களும் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...'புதிய தலைமைச் செயலகம் கட்ட விடப்பட்ட டெண்டர் 210 கோடி; வழங்கப்பட்டதோ 410 கோடி!'