எதிர்க்கட்சிகளின் பலமான எதிர்ப்பையும் மீறி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடு முழுக்க போராட்டங்களை நடத்தி வருகின்றன.
டெல்லியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மாணவர்கள், இஸ்லாமியர்கள் என குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நாடு தழுவிய அளவில் ஆதரவு திரட்டும் பிரச்சாரத்தை பாஜக முடுக்கி விட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக பாஜக தொண்டர்கள் நாடு முழுவதும் வீடுவீடாக சென்று குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக பல வீடுகளுக்குச் சென்று சிஏஏ குறித்து விளக்கம் அளித்து வருகிறார். இது போல் பாஜக தொண்டர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பேரணி நடத்த வேண்டும் எனவும் அக்கட்சி தலைமை உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக அரியலூர், திருவாரூர், நாகை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், தஞ்சாவூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருப்பூர், சேலம், மதுரை, வேலூர், புதுக்கோட்டை, கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பாஜக சார்பில் நேற்று மாநிலம் தழுவிய ஆதரவு பேரணிகள் நடத்தப்பட்டன.
இந்தப் பேரணியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க:தமிழ்நாட்டை துண்டாடும் எதிர்க்கட்சிகள்: பேரணியாக சென்று ஆட்சியரிடம் பாஜக மனு!