சேலம்: சேலம் அன்னதானப்பட்டி அருகே உள்ள மணியனூரில், சேலம் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு, சான்றுகள் பெற வரும் பொதுமக்களிடம் சில தரகர்கள் லஞ்சம் பெற்று, அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பங்கு தருவதாக சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய புகார் வந்தது.
இதனையடுத்து சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரமௌலி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு காவலர்கள் இன்று(ஜன., 11) பிற்பகலில் திடீரென மணியனூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தரகர்கள் இருந்தனர்.
இந்தச் சோதனையில் அங்கிருந்த தரகர்களிடமிருந்து கணக்கில் வராத, ஒரு லட்சம் ரூபாய் தொகையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணபவன், ஆய்வாளர் ராஜாமணி மற்றும் அலுவலக ஊழியர்கள் என மொத்தம் 30 பேரிடம், லஞ்ச ஒழிப்பு காவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மருத்துவக் கல்வி பயில நிதி உதவி கோரும் சேலம் மாணவி