சேலம்: அதிமுக விவசாய அணியின் மாநிலத் தலைவராகவும், தர்மபுரி மாவட்ட ஆவின் கூட்டுறவுச் சங்கத் தலைவராக இருந்து வரும், தாளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த டி.ஆர்.அன்பழகன், அவருக்குச் சொந்தமான கல்குவாரியில் பணிபுரிந்த ஜல்மாரம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ், முத்துவேல் ஆகிய இரண்டு இளைஞர்களைக் கடத்தி தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது.
கைது, நெஞ்சுவலி
இதையடுத்து, டி.ஆர்.அன்பழகனுக்கு உதவியதாக மகேந்திரன், முருகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் அன்பழகனை நேற்று (நவ.17) பென்னாகரம் காவல் துறையினர் கைது செய்தனர். தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு விட்டதாக டி.ஆர். அன்பழகன் கூறவே, முதலில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், டி.ஆர். அன்பழகன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கே நேரில் வந்திருந்த பென்னாகரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் பிரவினா, டி.ஆர். அன்பழகனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் காவல் துறையினர் பாதுகாப்புடன் அவர் கொண்டு வரப்பட்டுள்ளார்.
அதிமுக ஆளும் கட்சியாக இருந்த சமயத்திலேயே இவர் மீது பல்வேறு புகார்கள் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது ஆள் கடத்தல் புகாரில் டி.ஆர் அன்பழகன் கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'விஜய் வரிகட்டாமல் ஏமாற்றுகிறார், சூர்யா இரட்டை வேடம் போடுகிறார்'- கொதிக்கும் அர்ஜுன் சம்பத்!