சமூக ஆர்வலர் பியுஷ் மானுஷ் மற்றும் பாஜகவினருக்கு இடையே சமூக வலைதளங்களில் கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் பொருளாதார சீர்திருத்தம், காஷ்மீர் விவகாரம் குறித்து நேரில் விவாதிப்பதற்காக பாஜக அலுவலகத்திற்கு நேரில் வருவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை பியுஷ் மானுஷ் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பியுஷ் மானுஷ் சேலம் மாவட்டத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு நேற்று மாலை 5 மணியளவில் சென்று அக்கட்சியினரை சந்தித்து கேள்விகளை கேட்டார். அதனை முகநூலில் நேரலையில் பதிவும் செய்து கொண்டிருந்தார். இதையடுத்து பாஜகவினரும் அவரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
அப்போது பியுஷ் மானுஷுக்கு செருப்பு மாலை அணிவித்து பாஜகவினர் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர், அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து சேலம் மாநகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, பியுஷ் மானுஷ் மீது பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டது.
அதே போன்று பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் என பத்துபேர் மீது ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.