ஜால்கன் (மகாராஷ்டிரா): தமிழ்நாட்டில் இருந்து கொள்ளையடித்த பணத்துடன் தப்பிய இருவரை ஜால்கன் காவல் துறையினர் கைதுசெய்து தமிழ்நாடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மங்கள்ராம் அசுரம் பிஸ்நாய் எனும் 19 வயது இளைஞர் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் மோகன் குமார் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார். அதுமட்டுமில்லாமல், கடையின் உரிமையாளர் வீட்டிலும் சில பணிகளை செய்து வந்தார்.
இவ்வேளையில், அசுரம் பிஸ்நாய் கடையின் உரிமையாளரை அவரது வீட்டில் கட்டிபோட்டி விட்டு, அங்கிருந்த ரூ.50 லட்சம் வரையிலான பணத்தை திருடிச் சென்றுள்ளார். இதற்கு ராஜஸ்தானைச் சேர்ந்த மற்றொரு சிறுவனும் துணையாக இருந்துள்ளார்.
![ரூ.50 லட்சம் திருட்டு - சிக்கிய ராஜஸ்தானிகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10:25:14:1621616114_mh-jlg-05-robbery-accuse-arrested-7205050_21052021201658_2105f_1621608418_974.jpg)
பணத்தைத் திருடிய இருவரும், ராஜஸ்தான் தப்பிச் செல்ல, சென்னையிலிருந்து அகமதாபாத் செல்லும் விரைவு ரயிலில் ஏறியுள்ளனர். இதனிடையில் திருட்டு சம்பவம் குறித்து மோகன் குமார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
துரிதமாக செயல்பட்ட அவர்கள், சென்னை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் அவர்கள் ரயிலில் தப்பிச் சென்றனர். உடனடியாக சம்பவம் குறித்து மகாராஷ்டிரா மாநிலம் ஜால்கன் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
ரயில் அவ்வழியே கடக்கும் வேளையில் இவ்விருவர்களையும் பிடிக்க திட்டம் வகுக்கப்பட்டது. ஜால்கனை அடைந்த ரயில் சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. அதிலிருந்த இருவரையும் கண்டறிந்த காவல் துறையினர், உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களிடமிருந்த 37 லட்சத்து 97 ஆயிரத்து 780 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சென்னை காவல் துறையினருக்கு தகவலளித்த ஜான்கன் காவல் துறையினர், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து இருவர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.