கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை 4 மணியளவில் காரிப்பட்டி சுங்கசாவடி அருகே வாகன தணிக்கை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, வேனுக்குள் தங்க நகைகள் இருப்பதாகவும், கும்பகோணத்தில் இருந்து சேலத்தில் உள்ள தனியார் நகை கடைக்கு கொண்டு செல்வதாகவும் வேனில் இருந்தவர்கள் தெரவித்துள்ளனர்.
வேனில் சுமார் 100 கிலோ அளவிற்கு தங்க நகைகள் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், வேனில் வந்தவர்கள் கொண்டுவந்த ஆவணங்கள் அடிப்படையில் தங்க நகைகள் எடுத்து செல்லப்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேனை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஏற்காடு சட்டமன்ற தேர்தல் அதிகாரி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வேனில் கொண்டுவரப்பட்ட ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து தேர்தல் அதிகாரிகளும், மற்றும் வருமான வரித்துறையினரும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
பதிவு செய்யப்பட்ட வேனில் மொத்தம் 29 பெட்டிகளில் சுமார் பல கோடி மதிப்புள்ள தங்க நகைகளுக்கு ஆவணங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.