இது தொடர்பாக மதுரையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "சட்டப்பேரவையில் பள்ளிக்கல்விதுறை சார்பாக தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தனித்தன்மை வாய்ந்த பொருள் சார்ந்த நூலகம் மற்றும் காட்சியகங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சிந்து நாகரிகம் மற்றும் பழம்பெரும் நாகரிகம் குறித்த நூலகம் சிவகங்கையிலுள்ள கீழடியிலும், இசை, நாடகம் மற்றும் நுண்கலை தொடர்பான நூலகம் தஞ்சாவூரிலும், நாட்டுப்புறக் கலைகள் குறித்த நூலகம் மதுரையிலும், தமிழ் மருத்துவம் சார்ந்த நூலகம் திருநெல்வேலியிலும், பழங்குடியினர் பண்பாடு சார்ந்த நூலகம் நீலகிரியிலும், கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த நூலகம் திருச்சியிலும், வானியல் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த நூலகம் கோயம்புத்தூரிலும் மற்றும் அச்சுக்கலை சார்ந்த நூலகம் சென்னையிலும் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகி திட்டங்கள் வகுக்கப்பட்டன.
ஆனால், அறிவிப்பு வெளியாகி மூன்றாண்டுகள் ஆகியும், அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் உள்ளது. எனவே, சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட படி தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த பொருள் சார்ந்த நூலகம் மற்றும் காட்சியகங்களை, மேற்கண்ட 8 இடங்களில் அமைப்பதற்குரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, அரசு அறிவித்த படி, தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த நூலகம் மற்றும் அருங்காட்சியகங்கள் அமைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக, நிலை அறிக்கை தாக்கல் செய்யவும், வழக்கு குறித்து, பள்ளிக்கல்வித்துறை மற்றும் கலாச்சாரத்துறை செயலர்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.
இதையும் படிங்க: சிவாலய ஓட்டத்திற்கு தேவையான வசதிகள்! - நீதிபதிகள் உத்தரவு!