மதுரை: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை விவி டைட்டானியம் சார்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
அதில், "வி.வி. குழுமத்திற்குச் சொந்தமான குடோனிலிருந்து இலுமினைட் மினரல் சுமார் 39 டன் சட்டவிரோதமாக வைத்திருப்பதாகக் கூறி தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இலுமினைட் மினரல் நார்வேயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். மேலும், இது போன்ற கனிமங்கள் ஒன்றிய அரசிடம் உரிய அனுமதி பெற்று இறக்குமதி செய்யப்பட்டு உபயோகப்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற கனிமங்களை இறக்குமதி செய்யும்போது உரிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தப்படுகிறது. எவ்வித விசாரணையுமின்றி எங்கள் நிறுவனத்தின் மீது அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உரிய அனுமதி பெற்றே இலுமினைட் கனிமம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'தர்மத்தின் தலைவன்' படபாணியில் சட்டப்பேரவையில் வேட்டி அவிழ்ந்ததுகூட தெரியாமல் பேசிய சித்தராமையா