மதுரையைச் சேர்ந்த அருண் பிரசாத், தூத்துக்குடியைச் சேர்ந்த பிராசில் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுக்களைத் தாக்கல்செய்திருந்தனர்.
அதில், "தமிழ்நாடு அரசு வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு பிப்ரவரி 28ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்குத் தமிழ்நாடு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான (MBC) 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பிற சமூகத்தினரின் கல்வி, வேலை அனைத்தும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது; இது ஏற்கத்தக்கதல்ல.
ஆகவே, வன்னிய சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.